திருப்பூர், ஆக.17: பின்னலாடை நகரமான திருப்பூரில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே பணிக்குச் செல்பவர்களாக உள்ளனர். இங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களில் காலை 8:30 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு ஷிப்ட் அடிப்படையில் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் குடியிருப்புப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர், பொதுமக்கள் பணிக்குச் சென்றுவிடும் பகல் நேரங்களில் திறந்து விடப்படுகிறது. இதனால் வீடுகளில் ஆள் இல்லாத நேரத்தில் தண்ணீர் வீணாவதோடு, அன்றாட தேவைகளுக்கும் சமையலுக்கும் தேவையான குடிநீரைப் பிடித்துச் சேமித்து வைக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



