தாராபுரம், ஆக.17: தாராபுரம் அருகே குண்டடத்தில் நேற்று இந்து அன்னையர் முன்னணி சார்பில், அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேக விழா நடந்தது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலைவாணி, திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, குண்டடம் அருகே பொடாரம்பாளையம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் கலசம் எடுத்து, மேளதாளங்கள் முழங்க தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். இதில், பிரபல திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு, பெண்களுடன் சேர்ந்து தீர்த்தக் கலசம் எடுத்து வந்து, குண்டடம் வடுகநாதர் கோயில் முன்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், நடிகை கஸ்தூரி ஆகியோர் உரையாற்றினர்.




