Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரியில் உரிய நீரை பெற அரசு உச்ச நீதிமன்றத்தை நாடு வேண்டும்

பல்லடம், ஜூன் 13: காவிரியில் உரிய நீரை பெறுவதற்கு உடனடியாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை, நீர் பற்றாக்குறையால் திறக்க முடியாத சோகம் காவிரி டெல்டாவை வாட்டி வதைத்து வருகிறது. கடந்தாண்டு வரலாறு காணாத அளவில் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்பட்ட காவிரி டெல்டாவில், இந்த ஆண்டு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் 19 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பித்தும், கர்நாடகா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையோ, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவையோ கர்நாடகா ஏற்று அமல்படுத்தாத சூழ்நிலையில், மத்திய அரசும் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க தயாராக இல்லாத சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. எனவே தமிழ்நாடு முதல்வர் இது குறித்து நீர்வள ஆதாரத்துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து குறுவை சாகுபடி செய்வதற்கு காவிரி நீரை பெற்றுக் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.