திருப்பூர்: பின்னலாடை நகரமான திருப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காதர்பேட்டை பனியன் சந்தை. இங்கு சிறியதும் , பெரியதுமாக நூற்றுக்கணக்கான பின்னலாடை விற்பனை கடைகள் உள்ளன. இதுமட்டுமல்லாது விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சாலையோர தற்காலிக கடைகளும் விற்பனையை துவங்கும். ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெயர் பெற்ற திருப்பூரில், உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களும், வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பின்னலாடைகளை வாங்க தேர்வு செய்யும் முதன்மை இடமாக காதர்பேட்டை விளங்கி வருகிறது. நவம்பர் 8ம் தேதி வரவிருக்கும் தீபாவளி பண்டிகையே இங்குள்ள வியாபாரிகளின் பிரதான வியாபார காலமாக பார்க்கப்படுகிறது.
அதற்காக தற்போது முதலே தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு,வண்ணமயமான ஆடைகள் விற்பனைக்கு வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஆயத்த ஆடைகள், டி-ஷர்ட்டுகள், ரெடிமேட் சுடிதார்கள், நைட்டிகள் மற்றும் பேன்ட் ரகங்கள் விற்பனைக்குத் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை எரிபொருள் கட்டணம் உயர்வு, பின்னலாடை உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால்,பின்னலாடைகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் பண்டிகை காலம் என்பதால், கடந்த சில மாதங்களாக வர்த்தகத்தில் காணப்பட்ட தேக்க நிலையை ஈடுசெய்யும் வகையில் வழக்கத்தை விட அதிக அளவு கொள்முதல் செய்து விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


