Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் கோயில் நில வேலியை அகற்றியதால் பரபரப்பு: திருத்தொண்டர் அமைப்பினர் குவிந்தனர்

திருப்பூர், ஜூன் 11: திருப்பூரில் தவெக எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்ட வேலியை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பிச்சம்பாளையம் மாரியம்மன் விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக குமரானந்தாபுரம் பகுதியில் 1.7 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோயில் நிலத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கோயில் நிலத்தை மீட்கும் வகையில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அறநிலையத்துறை சார்பில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மனிஷ் மற்றும் தவெக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோரிடம் முறையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த வேலி சில இடங்களில் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் மற்றும் அறக்கட்டளையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.இது குறித்து திருத்தொண்டர்கள் அறக்கட்டளையினர் கூறியதாவது: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை போட்ட வேலி அகற்றப்பட்டுள்ளது. இது முழுக்க, முழுக்க சட்டவிரோதமானது. எனவே, அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். உடனே அந்த பகுதி முழுவதும் வேலியை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கோயில் நிலத்தை இத்தனை ஆண்டுகளாக நாங்கள் தான் பாதுகாத்து வந்தோம். யாரும் அதனை ஆக்கிரமிக்கவில்லை. இந்த பாதையை பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு செல்கிற மாணவ மாணவிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு வழிப்பாதை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருத்தொண்டர்கள் அறக்கட்டளையினர் சார்பில் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.