வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த விவகாரம்: கொலையானவர் விபரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர்,செப்.8: திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே குள்ளிசெட்டியார் வீதியில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் 30 வயது வாலிபர் தலையில் கல்லைப்போட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வந்த அருண்குமார் (28) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பாருக்கு முன்பு 30 வயது வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், அதே பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த போது அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினேன். என்னுடைய நண்பரும் உடன் இருந்தார். எங்களை அந்த வாலிபர் துரத்தி வந்தார். தொடர்ந்து போதையில் இருந்த வாலிபர் என்னிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்தார். அதனால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து கொலையானவரின் விவரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


