திருப்பூர்,செப்.8: 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமாத்தாள் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சித்ரா, மாவட்ட செயலாளர் ரகமத் நிசா, மாநில துணை தலைவர் அனிதா, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் நவீன், துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் பாலராஜசேகர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி ஆதிலட்சுமி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்குரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிக பணிநீக்கம் செய்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மலர்கொடி, சாந்தி இருவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, இரட்டைப் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு உடனடியாக வழங்கவேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுடைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு 100 சதவீதம் பதவி உயர்வையும் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 6,750 குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


