Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ளியம்பாளையத்தில் குப்பை கொட்டுவதை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்

திருப்பூர், செப்.7: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு வெள்ளியம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து பெண்கள் நேற்று குப்பையை கொட்டி கண்ணீருடன் ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு, வெள்ளியம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுவதன் காரணமாக சுகாதார சீர்கேடு, நிலத்தடி நீர் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதாக கூறி குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் திருப்பூர்-ஊத்துக்குளி பிரதான சாலையில் அமைந்துள்ள போராட்ட பந்தல் முன்பு குப்பைகளை கொட்டியும், பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் பாட்டில்களையும் வைத்தும் திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஊத்துக்குளி போலீசார் ஒப்பாரிப் போராட்டம் நடத்தக்கூடாது என கூறியதாக தெரிகிறது. அதனையும் மீறி பெண்கள் ஒப்பாரி வைத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெயிலில் கிடந்து இயந்திரங்கள் வீணாகும் அவலம்: மக்களுக்கு தெரியப்படுத்த கோரிக்கை

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘திருப்பூரில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். கடந்த வாரம் திருப்பூரில் குப்பை பிரச்னை பூதாகரமான நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மைக்கான அறிவியல் பூர்வமான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் ஏற்கனவே இருந்த கட்டமைப்புகளையும் பயன்படுத்த முடியாத வகையில் மாநகராட்சி நிர்வாகம் முடக்கி வருகிறதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நெருப்பெரிச்சல் திடக்கழிவு மேலாண்மை பூங்கா பணியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்கிறதா? அல்லது கட்டமைப்பை விரிவுபடுத்துகிறதா? என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்கனவே பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில், குப்பைகளை மேலாண்மை செய்யும் இந்த பணியை முடக்கி வைப்பது திடக்கழிவு மேலாண்மையில் தொய்வை ஏற்படுத்தும்’’ என்கின்றனர்.