Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவசர அவசரமாய் கொட்டகைகள் பிரிப்பு: நெருப்பெரிச்சல் திடக்கழிவு மேலாண்மை பூங்கா முடக்கம்?

திருப்பூர், செப். 7: நெருப்பெரிச்சல் திடக்கழிவு மேலாண்மை பூங்காவில் அவசர அவசரமாய் கொட்டகைகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாது மக்கள் தொகை பெருக்கத்திலும் வளர்ந்து வரும் மாநகரமான திருப்பூரில் கடந்த ஆண்டு குப்பை பிரச்னை பிரதானமானதாக இருந்தது. பாறைக்குழிகளில் குப்பை கொட்ட நீதிமன்றம் தடை விதித்த நிலையில் எதிர்கால தேவையையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாகவே திருப்பூர் நெருபெரிச்சல் பகுதியில் நாளொன்றுக்கு 50 முதல் 200 டன் வரையிலான உலர் மற்றும் ஈரக்கழிவுகளை பிரித்தெடுத்து சுத்திகரித்து மேலாண்மை செய்யும் வகையில் நவீன இயந்திரங்களுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை பூங்கா அமைக்கப்பட்டது. இதனை கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி அப்போதைய அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ,முன்னாள் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் 6 மாதத்திலேயே அவ்விடத்தில் திடக்கழிவு பணிகள் மேற்கொள்வது கைவிடப்பட்டதால் மீண்டும் குப்பை பிரச்னை உருவாகி பொதுமக்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.

மாநகராட்சியில் சேகரிக்கும் கழிவுகளை பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் தரம் பிரித்து நாளொன்றுக்கு 50 முதல் 200 டன் குப்பைகளை மேலாண்மை செய்வதற்குமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிரம்மல் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு திடக்கழிவு மேலாண்மை பூங்கா நிறுவப்பட்டது. மாநகராட்சியின் குப்பைப் பிரச்னைக்கு இதன் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் சில வாரங்களிலேயே அங்கு மேலாண்மை பணி நிறுத்தப்பட்டது. இதனால் குப்பைகள் திடக்கழிவு விதிகளின்படி மேலாண்மை செய்ய இயலாமல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குவிந்தது.

அதனை அப்புறப்படுத்த பல்வேறு பாறைக்குழிகள் தேர்வு செய்த நிலையில் அந்தந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அவை கைவிடப்பட்டது. இறுதியாக அம்மாபாளையம் மற்றும் ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டம், கருப்புக்கொடி, கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர். இதற்கு பலனில்லாமல் கடந்த 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அறிவியல் பூர்வமான திடக்கழிவு பணிகளை துரிதப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகமோ ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களையும் முடக்கி வருகிறது.

கடந்த 3 தினங்களாக நெருப்பெரிச்சல் பகுதியில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பூங்காவிற்கான கொட்டகைகள் மற்றும் கூரைகளை அதிரடியாகப் பிரித்து வருகிறது. மேலும், கழிவுகளைச் சுத்திகரிக்க கொண்டுவரப்பட்ட நவீன டிரம்மல் இயந்திரங்களும் பயன்படுத்தப்படாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. வெயிலில் காய்ந்து இயந்திரத்தின் உதிரிபாகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? அவசர அவசரமாக கூரைகள் ஏன் பிரிக்கப்படுகிறது? மாற்று இடத்தில் செயல்படுத்த திட்டமா? என்பது குறித்துப் பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் உள்ளது.

இது மாற்று ஏற்பாடுகளுக்கான முன்னோட்டமா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பணிகள் முடக்கப்படுகிறதா? என பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.