திருப்பூர், ஆக. 7: திருப்பூரில் பல இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடும் அவலநிலை உள்ளது. இதனால், முறையாக சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இது தவிர தொழில் நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
பல இடங்களில் குப்பைகள் குவியல், குவியலாக இருந்து வருகிறது. முறையாக அகற்றப்படாததால் பல இடங்களில் மர்ம ஆசாமிகள் தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் குப்பை துர்நாற்றத்தால் ஒரு புறமும், தீ வைத்து கொளுத்துவதால் ஏற்படுகிற புகை மற்றும் தூசினால் மறுபுறமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த பாதிப்பு தொடர் கதையாகி வரும் நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் பிரச்னை தலை தூக்க தொடங்கியுள்ளது. மாநகர் பகுதியில் பல இடங்களில் சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சாக்கடை கால்வாயில் கழிவுநீர் சரியாக செல்லாமல் ரோட்டில் வழிந்தோடுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் பகுதியில் பல இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால் அந்த கழிவுநீர் செல்ல முடியாமல் ரோட்டில் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கூறினால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.



