திருப்பூர், ஆக.7:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மறுசீரமைப்பு என்ற பெயரில் செவிலியர் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து குரல் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில், திருப்பூர் உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து 210 செவிலியர் பணியிடங்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றி வெளியிடப்பட்டுள்ள அரசாணை 204-ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்டாப் நர்ஸ் என்னும் பெயரை நர்சிங்க் ஆபீசர் என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் அரசு செவிலியர் சங்க மாநில பொருளாளர் கீதா, மாவட்ட தலைவர் அம்மாசை, தமிழநாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில இணை தலைவர் பெஜக்சின், மாவட்ட பொருளாளர் கிளபோர்டு எபி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



