Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பல்லடம் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நோயாளிகள்

பல்லடம்,ஜூலை6: பல்லடம் அரசு மருத்துவமனையில் போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாததால் உள்நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் 800க்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 90 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக டிஜிட்டல் எக்ஸ்ரே, இசிஜி, கர்ப்ப கால சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, கண் சிகிச்சை பிரிவு, கர்ப்பினி பெண்களுக்கான நவீன ஸ்கேன் வசதி, பல் பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லும் இம்மருத்துவமனைக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை. அதனால், மக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு கிடைக்கும் குடிநீரை பகிர்ந்து மக்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து வார்டுகளிலும் தேவையான இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கிட இயந்திரம் உள்ளது. ஆனால் குடிநீர் தான் இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தேவையான அளவு குடிநீரை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பல்லடம் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர் சாகுல் அமீது கூறுகையில், ‘‘பல்லடம் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. மருத்துமனைக்கு நான்கு குடிநீர் இணைப்புகள் இருந்தும் அதில் இரண்டு குடிநீர் இணைப்புகள் மூலம் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. அதுவும் போதுமானதாக இல்லை.இதனால். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போதிய குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.