திருப்பூர்,ஆக.5: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ள சர்வதேச ஆடைக் கண்காட்சியில் பங்கேற்பதற்கான கட்டணச் சலுகை காலக்கெடு ஆகஸ்ட் 17 வரையிலும், விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியா, ஜெட்டாவில் உள்ள சர்வதேசக் கண்காட்சி மையத்தில் வரும் செப்டம்பர் 24 முதல் 27ம் தேதி வரை 4வது சவுதி பேஷன் மற்றும் டெக்ஸ் எக்ஸ்போ சர்வதேசக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் சவுதி அரேபியா, வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த முக்கிய ஆடை வாங்குபவர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வணிகர்கள், சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
அதே வேளையில் சவுதி அரேபியாவில் தரமான ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் மற்றும் நவீன வடிவமைப்புகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால், இந்த கண்காட்சி திருப்பூர் ஜவுளி நிறுவனங்களுக்குத் தங்களது ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்தப் பெரும் வாய்ப்பாக அமையும், ஒன்றிய அரசின் சந்தை அணுகல் ஆதரவுத் திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படுவதால், இந்திய வர்த்தகர்கள் மானியக் கட்டணத்தில் இந்த கண்காட்சியில் பங்கேற்கலாம். முன்னதாக இந்த கண்காட்சிக்கான சலுகைக் கட்டணஅவகாசம் ஜூலை 30ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.


