மாநகரில் தொடரும் அவலம்; தீ வைத்து எரிக்கப்படும் குப்பையால் மக்கள் அவதி; கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
திருப்பூர்,ஆக.5: திருப்பூர் மாநகரில் தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதனை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 60 வார்டுகள் உள்ளன. இவை நிர்வாக காரணங்களுக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநகர் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உள்ளது. இதனால் நாள்தோறும் சுமார் 700 டன் வரை குப்பைகள் சேகரமாகி வருகிறது. இந்த குப்பைகள் கடந்த காலங்களில் பாறைக்குழிகளில் நிரப்பப்பட்டன.
இதன் பின்னரும் மாநகர பகுதியில் குப்பைகள் கொட்ட பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போரட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு, குப்பைகள் கையாளப்பட்டு வந்தன. கடந்த சில வாரங்களாக மாநகர பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தீ வைத்து எரித்துவிடுகிறார்கள். இதன் காரணமாக அதில் இருந்து வெளிவரும் புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். பலருக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது. எனவே இதுபோன்று குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


