உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளியூர் நபர்களுக்கு இலவச பட்டா: பூமிதான நிலத்தில் குடியேறும் போராட்டம் என அறிவிப்பு
தாராபுரம், செப்.5: தாராபுரம் அருகே அலங்கியம் ஊராட்சி பகுதியில் அரசு பூமிதான நிலத்தில் உள்ளூர் மக்களை புறக்கணித்து வெளியூர் நபர்களுக்கு இலவச பட்டா வழங்க விண்ணப்பம் பெறபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் ஊராட்சி பகுதியில் பூமிதான நிலத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து, பல்வேறு கட்டப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலங்களில், பூமிதான நிலத்தில் வசித்து வரும் தகுதியான குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, தற்போது அந்தப் பகுதியை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அங்கு வசித்து வரும் பொதுமக்களிடம் பட்டா கோரி விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் அதிமுக, திமுகவைச் சேர்ந்த சிலர் தலையிட்டு, பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை புறக்கணித்து, அப்பகுதியுடன் தொடர்பில்லாத வெளியூரில் வசிக்கும் நபர்களிடம் இருந்து பட்டா கோரி விண்ணப்பங்களைப் பெற்று, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பூமிதான நிலத்தில் வசித்து, பட்டா கேட்டு போராடி வரும் தங்களது குடும்பங்களை விட்டுவிட்டு, வெளியூரை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படும் தகவல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, பட்டா கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களின் ஒருங்கிணைப்பாளர் அழகர் தலைமையில் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் ராமலிங்கத்தை சந்தித்த அலங்கியம் பகுதி பொதுமக்கள், பூமிதான நிலத்தில் உண்மையாக வசித்து வரும் குடும்பங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு மட்டுமே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும், அந்த நிலத்தில் உண்மையாக வீடுகள் அமைத்து வசித்து வரும் குடும்பங்களை நேரடியாக ஆய்வு செய்து, அவர்களின் வாழ்வாதார நிலையையும் கருத்தில் கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதிகாரிகளிடம் இருந்து தங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.இதையடுத்து, ஒருங்கிணைப்பாளரும் விசிக பிரமுகருமான அழகர் கூறுகையில்,“பூமிதான நிலத்தில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கப்படக் கூடாது. வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி, தகுதியான குடும்பங்களை அடையாளம் கண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வரும் 8ம் தேதி பூமிதான நிலத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

