அவிநாசி, செப்.5: அவிநாசி வட்டாரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு அவிநாசியில் உள்ள பூமி நீளா தேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலிலும், நாராசா தெருவிலும் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று கண்ணன்- ராதை வேடமிட்டு, தேர் வீதிகளில் பஜனை பாடல்கள் பாடியபடியும் நடந்து வந்து விழாவை கோலாகலமாக கொண்டாடினர். விழாவில், சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ணர் வரலாறுகள் மற்றும் அவதார நோக்கங்களை விளக்கிப்பேசினர்.
பாடல், ஆடல், நாட்டிய நடன போட்டிகளும் நடந்தன. அவிநாசியிலுள்ள ஸ்ரீபூமி நீளாதேவி கரிவரதராஜ பெருமாள் கோயிலில் காலை அபிஷேகமும், அலங்காரமும், மகாதீபாராதைகளும், கூட்டுவழிபாடும் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவாராதனம், சாற்றுமறை, தீபாராதனை, தீர்த்தமும் வழங்கப்பட்டது. பூமிநீளாதேவிகரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரகார உலாவும் வந்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு, பஜனை குழுவினர், கிருஷ்ணரை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

