Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம்: விவசாயிகளை மிரட்டி பயிர்களை புல்டோசர் மூலம் அழிப்பது மனித உரிமை மீறல்

திருப்பூர், ஆக 3: விவசாய விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்கும் பணிக்காக விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய் அமைக்கும் ஐ.டி.பி.எல். திட்டத்தை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் கிருஷ்ணகிரி முதல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் வரை சாலையோரமாக அமைக்கப்பட்ட நிலையில், வெள்ளகோயில் முதல் இருகூர் வரையிலான 74 கிலோ மீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டு உரிமை என்ற பெயரில் நில மதிப்பை இழந்து தவிக்கும் விவசாயிகளின் உணர்வுகளை அலட்சியப்படுத்திவிட்டு, காவல்துறையின் மூலம் அச்சுறுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்லடம் தாலுகா பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களைப் புல்டோசர் கொண்டு அழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,

இது விவசாயிகளின் வாழ்வுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நில உரிமையை இழந்து தவிக்கும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காவல்துறையை வைத்து ஐடிபிஎல்-பிபிசிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை உடனடியாகக் கைவிட்டு, இத்திட்டத்தை சாலையோரத்திலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.