அவிநாசி, அக்.2: சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் வந்து செல்லும் பெரும்பாலான தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தெக்கலூர், சூரிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் திருமுருகன்பூண்டி அம்மாபாளையத்தில் இருந்து தெக்கலூர் செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஏற முயன்றார்.
அப்போது நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் தெக்கலூருக்கு பேருந்து செல்லாது எனக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதால், பேருந்து சக்கரத்தில் சிக்கி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அனைத்து பேருந்துகளும் தெக்கலூர் வழித்தடத்தில் நின்று செல்ல வேண்டும்.
மீறினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார், அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


