Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மினி இந்தியாவாகும் திருப்பூர்: குடும்பம் குடும்பமாக குடியேறும் வட மாநிலத்தொழிலாளார்கள்

திருப்பூர், ஜூலை 1: திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் வறுமை, தொழில் வளம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பிழைப்பு தேடி திருப்பூர் வந்த தொழிலாளர்கள், ஆரம்பத்தில் இங்கு பணி செய்து ஊதியத்தைச் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தனர். தற்போது அவர்கள் தங்களது குடும்பத்துடன் திருப்பூரிலேயே குடியேறுவது அதிகரித்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகள், கைக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்திறங்குவதைக் காண முடிகிறது. ஒரே நகருக்குள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாசாரங்களும், மொழிகளும் சங்கமிப்பதால் திருப்பூர் இன்று ஒரு மினி இந்தியா போலவே காட்சியளிக்கிறது.

தொழில்துறையின் வளர்ச்சிக்கு இவர்கள் வருகை இன்றியமையாதது என்றாலும், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் அதிகரிக்கும் மக்கள் தொகையால் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்குப் புதிய சவால் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி என மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வழக்கம். ஆனால், எந்தவொரு முன் திட்டமிடலும் இன்றி, மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் குடும்பங்கள் குவியும்போது கடுமையான உள்கட்டமைப்புச் சவால்களும் எழுகின்றன. ஏற்கனவே திருப்பூரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் பெரும் சவாலாக உள்ள நிலையில், கணக்கில் வராத கூடுதல் மக்கள் தொகையால் தண்ணீருக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

கழிவுநீர் மேலாண்மை, குப்பைகளை அகற்றுவது போன்ற மாநகராட்சியின் தினசரிப் பணிகளில் இந்த திடீர் மக்கள் பெருக்கம் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை சாதாரண காய்ச்சல், தலைவலி தொடங்கி பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத் தேவைகள் அதிகரிக்கக்கூடும். போக்குவரத்து தேவைகள் அதிகமாகும்போது அதற்கான சாலை கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோல், வட மாநிலங்களில் இருந்து வரும் குடும்பங்களில் பள்ளி செல்லும் வயதிலான குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பெற்றோருடன் இங்கு வருகிறார்கள். இவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்படலாம்.

இதனால் நகரில் குழந்தை தொழிலாளர் முறையும், பள்ளி சாரா குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சொந்த ஊரில் வாழ்வாதாரம் இல்லாததால் திருப்பூர் போன்ற தொழில்நகரங்களுக்கு வருகை தருவோரை நாம் தடுக்க இயலாது. ஆனால், இவர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை இன்றியமையாதது. கொரோனா காலத்திற்குப் பிறகு திருப்பூர் திரும்பாத தொழிலாளர்களை இங்குள்ள நிறுவனங்களே போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து அழைத்து வந்து தொழில் நடத்தியது. இப்போதைய சூழலிலும் இவர்களின் வருகை அவசியமானது.

ஆனால், குடும்பம் குடும்பமாகத் தொழிலாளர்கள் குடியேறும் போது அவர்களுக்கான கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு பகுதியில் 500 குடும்பங்கள் உள்ள நிலையில், அது 600 குடும்பங்களாக அதிகரிக்கும் போது அங்கு குடிநீர் முதல் திடக்கழிவு மேலாண்மை வரையிலான பணிகளைத் திட்டமிட வேண்டி உள்ளது. இதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி எந்தெந்த பகுதிகளில் மக்கள் தொகை எவ்வாறு உள்ளது என்பதை எல்லாம் திட்டமிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகலாம் எனத் தெரிவித்தார்.