Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு பஸ்சை சிறைபிடித்த 20 பேர் மீது வழக்குப்பதிவு: நாட்றம்பள்ளி அருகே மதுகடைக்கு எதிர்ப்பு

நாட்றம்பள்ளி, ஜூலை 13: நாட்றம்பள்ளி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி கொண்ட கிந்தனப்பள்ளி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையில் ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானகடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒட்டப்பட்டி கிராமத்தில் இயங்கிய டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு, கொண்ட கிந்தனப்பள்ளி ஊராட்சி, மேலூர் கிராமத்தில் திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.

இதையறிந்த கொண்ட கிந்தனப்பள்ளி பகுதி மக்கள், தங்கள் பகுதியில் 2வதாக மேலும் ஒரு டாஸ்மாக்கடையை திறக்க கூடாது என கூறி கடந்த 10ம் தேதி பச்சூர்- ஆந்திரா சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது நேற்று நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.