வி.கே.புரம் பள்ளி விடுதியில் இருந்து மாயமான பிளஸ்1 மாணவரை கேரளாவில் மீட்ட போலீசார்
வி.கே.புரம், நவ. 12: வி.கே.புரம் பள்ளி விடுதியில் மாயமான பிளஸ்1 மாணவரை போலீசார் கேரளாவில் மீட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து(45). இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு நாகராஜன்(17), இசக்கிராஜ் என 2 மகன்கள் உள்ளனர். நாகராஜன், வி.கே.புரத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வரும் மாணவர், 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த தாயாரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் துர்காதேவி வீட்டுக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் அன்றைய தினம் இரவில் நாகராஜன் விடுதிக்கு வரவில்லை என்று விடுதி காப்பாளர் செல்போனில் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்கள் வீடுகளில் விசாரித்தார். மேலும் நாகராஜனுடன் படிக்கும் மாணவர்களிடமும் விசாரித்து பார்த்தார். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுடலைமுத்து வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவரை தேடினர். இதில் மாணவர், கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து வி.கே.புரம் போலீசார் கேரளா சென்று மாணவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.