தலைவன்கோட்டை குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தென்காசி,ஆக.12:தலைவன்கோட்டை குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமையில் அப்பகுதி பெண்கள் ஏரளமானோர் திரண்டு வந்து தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘எங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்து இருக்கும் மலையடிக்குறிச்சி வருவாய் கிராம சர்வே எண்கள் 378/10A, 11A, 11B ஆகியவற்றின் இடங்கள் இருந்து வருகிறது. அந்த சர்வே எண்களில் தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலையடிகுறிச்சி வருவாய் கிராம பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது. இதன் அருகில் பள்ளி, மைதானம் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். குடியிருப்புகள் மத்தியில் டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கும் தீங்கு ஏற்படும். எனவே இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைத்து விட்டு மலைப்பகுதியில் குடியேறுவோம்’ என்று அதில் கூறியுள்ளனர்.