Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து கடமான்கள் அட்டகாசம்

களக்காடு,ஆக.29: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது இங்கு வாழும் கடமான், யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டு பன்றிகள், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையிலான வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடமான்கள் கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்துள்ளன. இவைகள் ஊர் பகுதியில் உள்ள ஆறு, கால்வாய்களில் காணப்படும் புதர்களில் தஞ்சமடைந்துள்ளன. இரவில் அவைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். அந்தவகையில் களக்காடு அருகே உள்ள திருத்துப்பனை பகுதியிலும் கடமான்கள் கூட்டம் புகுந்துள்ளது. இவைகள் நேற்றுமுன்தினம் பட்டப்பகலில் விளைநிலங்களுக்குள் நுழைந்தன.

அவைகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழை, நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்தன. விளை நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் கடமான்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் விவசாயிகள் திரண்டு சத்தம் எழுப்பி அவைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கடமான்கள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராஜபுதூர், திருக்குறுங்குடி, மலையடிபுதூர், மாவடி, சாலைப்புதூர், களக்காடு, பத்மநேரி, புலவன்குடியிருப்பு, கங்கணாங்குளம், சேரன்மகாதேவி பகுதிகளில் சாலைகளில் உலா வரும் கடமான்களால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. கடமான் தாக்கி விவசாயிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

எனவே ஊருக்குள் சுற்றி திரியும் கட மான்களை வனப் பகுதியில் விரட்டியடிக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.