Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தென்மாவட்டங்களில் வாழை இலை விலை கிடுகிடு உயர்வு; ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களின் உடல் நலனிற்கு பாதிப்பு

திருச்செந்தூர், ஆக. 29: தென்மாவட்டங்களில் வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாவதால் சிறியரக ஓட்டல்களில் இலைக்குப் பதிலாக பச்சை நிற பேப்பர் இலை, பிளாஸ்டிக் பட்டர் பேப்பர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் உடல்நலனிற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தில் வாழை இலைக்கு தனிப்பட்ட இடம் உண்டு. திருமணங்களில் விருந்து வழங்கும் போதும், விரத நாட்களில் பிரசாதம் அளிக்கும் போதும், கோவில்களில் அன்னதானம் நடத்தும் போதும் வாழை இலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வாழை இலை இயற்கையாகவே ஒரு சுத்தமான மற்றும் பாதுகாப்பான பாத்திரமாக விளங்குகிறது. அதன் மேற்பரப்பில் இருக்கும் மெழுகு போன்ற சீரான அடுக்கு, உணவின் சுவை மற்றும் மணத்தை மேம்படுத்துகிறது.

இதோடு, இலைக்குள் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை, உணவில் இருக்கும் நுண்ணுயிர்களை அழித்து சுகாதாரத்தை பாதுகாக்கிறது. வாழை இலையில் சூடான உணவை வைத்தால், அதிலிருக்கும் இயற்கையான ஹைட்ரோபோபிக் மெழுகு அடுக்கு உணவுடன் கலக்கிறது. இதனால் உணவின் சுவையும் மணமும் அதிகரிக்கிறது. வாழை இலை இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்தது. இதில் சாப்பிடும் உணவு எளிதாக செரிமானமாகிறது. அதேசமயம், அஜீரணம், வாயுத் தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற ஜீரண பிரச்னைகளை குறைக்கும் சக்தி இதில் உள்ளது என்றும் வாழை இலை சாப்பாட்டின் காரணமாக குடல் செயல்பாடு சீராகும் என்றும் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இதில் உள்ள பாலிஃபெனால்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும் திறன் பாரம்பரிய ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பாத்திரங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரிய சவாலாக இருக்கின்றன. அவை மண்ணில் கரையாமல், மாசு ஏற்படுத்துகின்றன. ஆனால் வாழை இலை முற்றிலும் இயற்கையானது, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காதது. பயன்படுத்திய பிறகு இயற்கையாகவே மண்ணில் கலந்து உரமாக மாறி, சூழலுக்கு பலன் தருகிறது. ஆனால் தற்போது அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதைப் போல் வாழை இலை விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக ஆவணி பிறந்தது முதல் முகூர்த்த நாட்களாக இருப்பதால் வாழை இலை விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

கடந்த வாரத்தில் ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்ட 200 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு, கடந்த சில தினங்களாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு இலை ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனை ஆகிறது. கேரளத்தில் ஓணம் பண்டிகை தேவைக்காகவும் வாழை இலை விலை கிடு கிடுவென உயர்ந்ததாக கூறப்பட்டாலும் அதன் பின்னரும் இலை விலை குறையவில்லை. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் ஓட்டல்களில் டீ, காபி, சாப்பாடு, டிபன் வகைகள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இச்சூழலில் வாழை இலையின் விலை உயர்வால் என்ன செய்வதென்று தெரியாமல் ஓட்டல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.இதனால் பல உணவகங்களில் பச்சை நிற பேப்பர் இலைகளையும், பிளாஸ்டிக்கால் ஆன பட்டர் பேப்பர்களையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

பச்சை நிற பேப்பர் இலைகளில் சூடான உணவை வைக்கும் போது அதன் சாயம் உணவில் படிகின்றது. சில பச்சை நிற பேப்பர் இலைகளின் மீது பிளாஸ்டிக் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. சூடான உணவு அதில் சாப்பிடும் போது உணவோடு பிளாஸ்டிக் துகள்களும் உடலினுள் சேர்கிறது. பிளாஸ்டிக் பட்டர் பேப்பர்கள் சூட்டை தாங்கினாலும் அதிலும் பிளாஸ்டிக்தான் பிரதானம் என்பதால் அதுவும் உடலுக்கு கேடையே தருகிறது. பட்டர் பேப்பரிலும் அதன் விலைக்கு ஏற்ப தரமும் அதன் நிறமும் வேறுபடுவதால் குறைந்த விலைக்கு கிடைக்கும் பட்டர் பேப்பர்களையே உணவகங்களில் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில கடைகளில் சாப்பிட இலை வழங்கப்பட்டாலும் பார்சல்களுக்கு இந்த பட்டர் பேப்பர்களையே பயன்படுத்துகின்றனர். பெரிய உணவகங்களில் புட் கிரேடு பிளாஸ்டிக் தட்டிலேயே உணவை பரிமாறி விடுகின்றனர்.

இதை ‘டீசன்டாக’ கருதும் வாடிக்கையாளர்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி அந்த தட்டிலேயே சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி சிறிய முதல் பெரிய அளவிலான உணவகங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இங்கும் பல உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பேப்பர் இலையே பரிமாறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கும் உணவகத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. தென்மாவட்டங்களிலிருந்தே சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் வாழை இலைகள் கட்டு கட்டாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் தற்போது இந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இலைகளின் அளவும் வெகுவாக குறைந்துள்ளது. சென்னைக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து ஓரளவு வாழை இலை சப்ளை உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் இதுபோன்ற எந்த வாய்ப்பும் இன்றி பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. ெதாடரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு சாமானியர்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையுமே பாதித்து வருகிறது.