களக்காடு, அக். 28: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தையில் பிரசித்திப் பெற்ற குலசேகரநாதர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை விழா, நவராத்திரி விழா, வருஷாபிஷேகம், கந்த சஷ்டி விழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவில் பூஜைகள் முடிந்ததும், பூசாரி முத்துகிருஷ்ணன் (48) கோயிலை பூட்டி விட்டு சென்று விட்டார். அதன் பின் நள்ளிரவில் மர்ம நபர் கோயிலுக்குள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக நந்தி மண்டபம், தெட்சிணாமூர்த்தி சன்னதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, கோயிலின் சன்னதி கதவுகளையும், மடப்பள்ளி பூட்டையும் உடைத்து பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கதவுகளை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி பலிக்கவில்லை.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால், ஆத்திரமடைந்த மர்ம நபர் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டிருந்த சுவாமிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டு துணிகளை தீ வைத்து எரித்து அட்டகாசம் செய்துள்ளார். உடைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், நாசமான பட்டு துணிகளின் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும். இதுபற்றி கோயில் பூசாரி முத்துகிருஷ்ணன் களக்காடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இதில் கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மேலப்பத்தை ஆசாத்புரத்தைச் சேர்ந்த கணபதி மகன் தொழிலாளியான சுப்பிரமணியன் (43) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சுப்பிரமணியனை கைது ெசய்த போலீசார் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின்பேரில் பாளை மத்திய சிறையில் சுப்பிர
மணியனை அடைத்தனர்.


