Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் நெல்லை மாநகரில் குவியும் குப்பைகள்!!

நெல்லை: நெல்லை மாநகரில் வணிக தலங்கள் பெருகிக்கொண்டே செல்வதால், மாநகரத்தின் எல்கைகளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. விரிவாக்க பகுதிகள் அதிகரிக்க, அதிகரிக்க, அதற்கு ஏற்ப சுகாதார வசதிகளுக்கான கட்டமைப்புகள் நெல்லை மாநகரில் தற்போது இல்லை. நெல்லை மாநகர் பகுதியில் ஒரு நாளைக்கு சராசரியாக 130 டன் குப்பைகள் குவிகின்றன. விழாக்காலங்களில் 150 டன் வரை குப்பைகள் குவிகின்றன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகரில் தற்போது 5 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை காணப்படும் நிலையில், ஆயிரம் பேருக்கு ஒரு துப்புரவு பணியாளர் என்ற ரீதியில் இருக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் விதிமுறையாகும். ஆனால், தற்போது 2,500 பேருக்கு ஒரு துப்பரவு பணியாளர் என்ற கணக்கில் கூட பணியாளர்கள் இல்லை. தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நெல்லை மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே குவிய தொடங்கியுள்ளன. பாளை சமாதானபுரம், மனக்காவலம்பிள்ளை நகர், தெற்கு பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அதிகரித்து வருகின்றன.

பாளையின் விரிவாக்க பகுதிகள் தற்போது குப்பைகள் கொட்டுவதற்கு தளமாகவும் மாறி வருகிறது. தியாகராஜநகர் விரிவாக்க பகுதிகள் மற்றும் சீவலப்பேரி சாலை விரிவாக்க பகுதிகளில் மொத்தமாக குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இக்குப்பைகளை முறையாக அள்ளி ராமையன்பட்டி கொண்டு செல்ல வழியில்லை. மேலும் கழிவுநீரோடைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள், அவற்றை நாட்கணக்கில் அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையோரங்களில் மண் குவியலும் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாநகராட்சிக்கு மக்கள் தொகைக்கேற்ப தற்போது சுமார் 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தேவையாக உள்ள நிலையில், நிரந்தர தூய்மை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளனர். நெல்லை மாநகராட்சியே கடந்த சில ஆண்டுகளில் ஒப்பந்த பணியாளர்கள் மயமாகிவிட்ட நிலையில், அவர்களுக்கும் பணிச்சுமை வாட்டியெடுக்கிறது. எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப் உள்ளிட்ட சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை. மாதம் இருமுறை அவர்கள் ஊதியத்திற்கு மாநகராட்சி வளாகத்தில் குவிந்து போராட வேண்டிய சூழலில் உள்ளனர். இந்நிலையில் குப்பைகள் பெருகுவதை தடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

மேலும், குப்பைகள் சரியான முறையில் அள்ளாமல் இருப்பதால், பல பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் பெருகி வருகிறது. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், பொதுமக்களிடம் இருந்து முறையாக குப்பைகளை பெறவும், குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அள்ளி செல்லவும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான துப்புரவுப்பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்வதோடு, அனைத்துப்பகுதியிலும் துப்புரவுப் பணி சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வேண்டும். குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்கள் உடனடியாக பழுது நீக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள் நெல்லை மாநகரின் விரிவாக்க பகுதிகளில் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகளும் பெருகி வருகின்றன. குறிப்பாக திருமால்நகர், டிவிஎஸ் நகர், சீவலப்பேரி சாலையின் பைபாஸ் பகுதிகளில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. குப்பைகள் எரிவதை சுட்டிக்காட்டினால், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாநகராட்சி சுகாதார துறையினர் கேட்டு கொண்டு வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள் பெருகி வருகின்றன. லஞ்ச வழக்கில் சிக்கியநெல்லை மாநகராட்சி இளநிலை பொறியாளர் இடமாற்றம் நெல்லை, அக். 28: நெல்லை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய இளநிலை பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சியில் கடந்த ஜூலை 3ம் தேதி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின்சிங் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பு பொறியாளர் அசோக்குமாரிடம் கணக்கில் வராத பணம் ரூ.3,200, இளநிலை பொறியாளர் ராமநாதனின் பேண்ட் பாக்கெட்டில் கத்தையாக வைத்திருந்த பணம் ரூ.3,100, துப்புரவு மேற்பார்வையாளர் சிவகுமார் பேண்ட் பாக்கெட்டில் கத்தையாக வைத்திருந்த பணம் ரூ.12,100, குழந்தையின் பிறப்பு சான்றில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்க வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் பேண்ட் பாக்கெட்டில் கத்தையாக வைத்திருந்த பணம் ரூ.6,800 உட்பட கணக்கில் வராத பணம் ரூ.96 ஆயிரத்து 600 லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் ராமநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் சிவகுமார், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 2023ன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத் துறையில் நிர்வாக காரணங்களாக 7 பேரை பணியிட மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரைக்குடி மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் சீர்காழி நகராட்சிக்கும், நெல்லை மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராமநாதன் தாரமங்கலம் நகராட்சி இளநிலை பொறியாளராகவும், காரைக்குடி மாநகராட்சி வரைதொழில் அலுவலர் மணிகண்டன் கடலூர் மாநகராட்சிக்கும், காரைக்குடி மாநகரா்ட்சி உதவியாளர் முத்துமாரி சிவகாசி மாநகராட்சிக்கும், நெல்லை மாநகராட்சி சுகாதார பணியாளர் கலைஜோதி ராமேஸ்வரம் நகராட்சிக்கும், நெல்லை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சிவகுமார் பத்மநாபபுரம் நகராட்சிக்கும், ஓட்டுநர் சுப்பையா துறையூர் நகராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநகராட்சி பணியாளர்கள் என்பதால் பணிமாறுதல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.