நெல்லை,ஆக.28: மிலாடி நபியை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி - அழகிய பாண்டியபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அருகேயுள்ள பாழடைந்த கட்டிடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஊத்துமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல் முருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 1,510 மதுபாட்டில்களுடன் பாரின் உரிமையாளர் முத்துப்பாண்டி உள்பட 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதைதொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்று செல்வக்கனி, மாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை பிடித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 1510 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடியது பார் உரிமையாளர் முத்துப்பாண்டி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


