கடையநல்லூர், ஆக.28: மேலக்கடையநல்லூர் மாதா கோவில் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கணபதியம்மாள் (73). கணவர் இறந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 11ம் தேதி நள்ளிரவில் ஓட்டு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், மூதாட்டியை கட்டிப்போட்டு, 40 கிராம் தங்கச் செயினையும், காதில் அணிந்திருந்த தலா 2 கிராம் எடையுள்ள 2 கம்மல்களையும் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி டி.எஸ்.பி. நமச்சிவாயம் மற்றும் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்ற ரமேஷ் மனைவி வேலம்மாள் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், வேலம்மாளுக்கு இடைகாலைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷுடன் கடந்த 8 ஆண்டுகளாக பழக்கம் இருப்பதும், சுரேஷின் நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் மகன் கோகுல் கண்ணன் (36), என்பவரும் அவருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், மூதாட்டியிடம் நகை இருப்பதை அறிந்து சுரேஷ் மற்றும் கோகுல் கண்ணன் ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வேலம்மாள் மற்றும் கோகுல்கண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிராம் தங்க செயின் மற்றும் 4 கிராம் எடையுள்ள 2 தங்க கம்மல்கள் என மொத்தம் 44 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.



