Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேலப்பாளையம் மண்டலத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்

நெல்லை, ஆக. 26: மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சாலைகளை விரைந்து சீரமைக்கக்கோரி மாநகராட்சி குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று துணைமேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மேலப்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் மண்டல வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் சேதமடைந்துள்ளன. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தார் வரத்து குறைவால் சாலை பணிகள் தாமதமாவதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் ஆசாத் ரோடு ஜின்னா திடல் வாபர் பள்ளிவாசல் முதல் விஎஸ்டி பள்ளிவாசல் வரை சாலை போடுவதற்காக கடந்த 10 தினங்களுக்கு முன்பு குழிகள் தோண்டினர். ஆனால் இன்று வரை சாலை பணிகள் நடக்கவில்லை. கொட்டிக்குளம் பஜார் சாலை நடுவில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள் தினமும் நடக்கிறது. சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஸ்ரீபுரம் ஊருடையான் குடியிருப்பு பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில் உள்ள மருத்துவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டனர்.

இதனால் எங்கள் ஊர் மையத்தில் மருத்துவர் இல்லை. அதனால் வயதானவர்கள், பெண்கள் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதி நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் உரிய மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.