Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் திடீர் பழுதால் நடுச்சாலையில் நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து நெருக்கடி

நெல்லை,மே26: நெல்லை ரவுண்டானா பகுதியில் நேற்று நண்பகலில் வந்துகொண்டிருந்த அரசு பஸ், திடீரென ஏற்பட்ட பழுதால் நடுச்சாலையில் நின்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாளை பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு நேக்கி வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் சீர்படுத்திய நிலையில் பின்னர் வந்த அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் பழுதை சரிசெய்து பஸ்சை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் இடம்பெற்றுள்ள வண்ணார்பேட்டையானது, மாநகரின் இதயப் பகுதியாகத் திகழ்கிறது. இப்பகுதியில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள மேம்பாலத்தின் கீழ் வடக்கு பகுதியில் பாளை நோக்கி செல்லும் பஸ்நிறுத்தமும், தெற்கு பகுதியில் சந்திப்பு பஸ்நிலையம், டவுன் நோக்கி செல்லும் பஸ்நிறுத்தமும் அமைந்துள்ளது. இதனால் எப்போது பார்த்தாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும், அதுபோல் வாகனங்களும் அதிகளவு வந்து செல்லும் வகையில் நெருக்கடி மிகுந்து காணப்படும்.

இந்நிலையில் நேற்று நண்பகல் பாளையில் இருந்து நெல்லை வண்ணார்பேட்டை பணிமனைக்கு பயணிகள் இன்றி வந்த அரசு பஸ் திடீரென ஏற்பட்ட பழுதால் ரவுண்டானா திருப்பம் பகுதியில் நடுச்சாலையிலேயே நின்றது. இதன்காரணமாக பாளை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மதுரைசாலையில் இருந்து புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பாளை பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு, டவுன் நோக்கி வந்த கார், பைக், அரசு பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தற்போது நெல்லையில் வெய்யில் வாட்டிவருவதால் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் இதன் காரணமாக கடும் அவதிக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர். பின்னர் அங்கு வந்த அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் பழுதை சரிசெய்து பஸ்சை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.