Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 6.5 பவுன் நகை அபேஸ்

நெல்லை,ஜன.22: திசையன்விளை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 6.5 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற அவரை மாவட்டம் விட்டு மாவட்டம் அனுப்பி போலீசார் அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் லெட்சுமி (78). இவர் திசையன்விளை அருகே உள்ள தட்டார்மடத்தில் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து பஸ்சில் வள்ளியூருக்கு சென்றார். வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 6.5 பவுன் நகை மாயமாகியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லெட்சுமி திசையன்விளை போலீசில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால் அவர் தட்டார்மடத்தில் பஸ் ஏறியதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு போலீசார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி தட்டார்மடம் போலீசில் நேற்று புகார் அளித்தார். இச்சம்பவத்தில் திருடு போன சம்பவ இடம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கே தெரியவில்லை. இதனால் அவர் பஸ்சில் ஏறியது தட்டார்மடம் காவல் எல்லையிலும், பயணம் செய்தது திசையன்விளை காவல் எல்லையிலும், இறங்கியது வள்ளியூர் காவல் எல்லையிலும் உள்ளது. இந்த மூன்று காவல் நிலையங்களில் எந்த காவல் நிலையத்திலும் மூதாட்டி புகாரை கொடுக்கலாம்.

புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்படி போலீசார் புகாரைப்பெற்று ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்து, அதன் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு புகாரை மாற்ற வேண்டும். காவல் எல்லையைக்காரணம் காட்டி புகார்தாரரை திருப்பி அனுப்ப சட்டத்தில் இடமில்லை. ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை போலீசார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு புகாரை கொடுக்க மூதாட்டியை போலீசார் அனுப்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். சட்டத்தில் முகாந்திரம் இருந்தும் மூதாட்டியை இன்னொரு காவல் நிலையத்திற்கு போலீசார் அலைக்கழித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அரசு வக்கீல் கருணாநிதி கூறுகையில், ‘பிஎன்எஸ் சட்டத்தின் படி சம்பவம் எந்த இடத்தில் நடந்தாலும், சம்பந்தபட்டவர் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். போலீசார் புகாரை பெற்று ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். புகார்தார் 3 நாட்களுக்குள் எப்ஐஆர் மாற்றம் செய்யபட்டுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும். இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது இது தான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது’ என்றார். மக்கள் நம்மோடு உள்ளனர்