Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை திட்டம் அமல்படுத்தப்படுமா?

தியாகராஜநகர், ஜூலை 20: நெல்லை மாநகரில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அதிகரித்துவரும் நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சர்வீஸ், இணைப்பு சாலை திட்டங்கள் விரைவில் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுதினமும் அன்றாடம் சாலைக்கு வரும் பொது வாகனங்களால் நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் சாலை வசதி இல்லை. பெரும்பாலானவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையாக டவுன் சுவாமி நெல்லையப்பர் தேசிய நெடுஞ்சாலை, திருவனந்தபுரம் சாலை, வடக்கு தெற்கு பைபாஸ் சாலைகள் உள்ளன. இங்கு வணிக வளாகங்கள் அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்பு, அடிக்கடி பல்வேறு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தச்சாலைகளை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது. ஒருபுறம் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் மறுபுறம் போக்குவரத்து விதிமீறல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இதுவிஷயத்தில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு கேமரா போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தாலும் பலர் போக்குவரத்து விதிகளை கண்டு கொள்ளாமல் வாகனங்களில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் செல்கின்றனர். இவர்களின் செயலால் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்து பயணிப்பவர்களும் சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு வாகன பெருக்கம் தவிர்க்க முடியாததாக மாறிவரும் சூழலில் மாநகர பகுதிக்குள் ஏற்கனவே திட்ட மிடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட சாலை மேம்பாட்டு திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வாக ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் தொடங்கி வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை செல்லப்பாண்டியன் மேம்பாலம் தொடங்கும் இடம் வரை சாலை அமைக்கும் திட்டம் மாநகராட்சி சார்பில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளைத்தொடங்கி இந்த சாலையை அமைத்தால் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை பகுதிக்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் திருவனந்தபுரம் சாலையை தவிர்த்து இந்த புதிய இணைப்பு சாலை வழியாக செல்ல வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த இணைப்பு சாலையை வண்ணார்பேட்டை பிஎஸ்எஸ் தியேட்டர் அருகே ரவுண்டானா போல் அமைத்து வாகனங்கள் இப்பகுதியை சுற்றி அண்ணாசாலை பகுதிக்கு செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைக்கலாம்.

இதேபோல் தெற்கு பைபாஸ் சாலை பாளையங்கால்வாய் பாலம் அருகே தொடங்கி குறிச்சி மேலப்பாளையம் வாய்க்கால் கரை வழியாக மேலப்பாளையம் ரயில்வே கேட்டை தாண்டி டவுன் வரை வாய்க்கால் கரை சாலை உள்ளது. இந்த சாலையை மேலும் தரமாக மேம்படுத்தி அகலப்படுத்தினால் பல வாகனங்கள் இந்த சாலை வழியாக டவுன் பகுதிக்கு செல்ல முடியும். அத்துடன் நெல்லையப்பர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சற்று குறையும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் பாளையங்கால்வாய் இரு கரையை ஒட்டி வாய்ப்புள்ள இடங்களில் சாலையை அகலப்படுத்தினால் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற சிறிய வாகனங்கள் அந்தப் பகுதியை பயன்படுத்தி பிரதான சாலையை தவிர்த்து செல்லும் இடங்களுக்கு செல்ல முடியும்.இதேபோல் மாநகரில் வாய்ப்பு உள்ள அனைத்து முக்கியச் சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை அவசியம். இதுபோன்ற திட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து அமல்படுத்தப்படுமா? என்பதே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

குலவணிகர்புரம் ஒய்வடிவ ரயில்வே மேம்பால பணி தொடங்குமா?

நெல்லை மாநகரின் மற்றொரு மிகப்பெரிய திட்டமான பாளையங்கோட்டை குலவணிகர்புரம் திருச்செந்தூர் ரயில்வே கிராசிங் பகுதியில் உள்ள கேட்டில் மேம்பாலம் அமைக்கும் திட்டமும் கடந்த 2011ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டுகளாக இந்தத்திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது கடைசியாக கடந்த திமுக ஆட்சியில் 120 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வடிவில் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்தத்திட்டத்தின் வேகம் குறைந்துள்ளது. குலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் புதிய பஸ் நிலையம் முதல் பாளையங்கோட்டை பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனால் பள்ளி அலுவலகம் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஓய்வடிவ ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் வருகிற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடரில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனே தொடங்கி ஓராண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.