Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் இரவு நேரத்தில் இயக்கப்படும் மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

நெல்லை,ஜூலை20: நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு இயக்கப்படும் மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை மாநகர பகுதிக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது இப்பிடத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரயில்களில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் இரவு நேரத்தில் பணிமுடிந்து வீட்டிற்கு செல்ல நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டையில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். இதற்காக மாநகர அரசு பஸ்களில் புதிய பஸ்நிலையம் செல்ல ரூ.10ம், வண்ணார்பேட்டைக்கு ரூ.7ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் மாநகர தாழ்தள சொகுசு பேருந்தில் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. புதிய பஸ்நிலையத்தில் இருந்து டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு ரூ.12 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை மாநகர பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்ல 25 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட கிராமப்புற வழித்தடங்களில் பெயரளவில் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான மினி பஸ்கள் போட்டிப்போட்டு அனுமதி பெறாத வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்தும், ரயில் நிலையத்தில் இருந்தும் அரசு பஸ்களுக்கு போட்டியாக ரூ.10 கட்டணத்தில் மினி பஸ்கள் அனுமதி இன்றி புதிய பஸ்நிலையம், மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கும் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் மினி பஸ்கள், புதிய பஸ்நிலையத்தில் அரசு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் பகுதியில் பயணிகளின் வழியை மறித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் வெளியில் இருந்து கிழக்கு பகுதி நுழைவு வாசல் வழியாக பஸ்நிலையத்துக்குள் வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் பயணிகளுக்கும் மினிபஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது. அதேநேரத்தில் அரசு பஸ்களை வழிமறித்து நிறுத்தப்படுவதால் அரசு பஸ் ஊழியர்களுக்கும், மினி பஸ் ஊழியர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மேலப்பாளையம் போலீசார் எச்சரித்தும் மினி பஸ் ஊழியர்கள் தங்களது போக்கை கைவிடுவதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் மினி பஸ்களில் வழக்கமான கட்டணம் ரூ.10க்கு பதிலாக ரூ.15 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.