நெல்லை, அக். 17: தென்காசியில் தொழில் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.4.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமார் (50). இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பெருந்தொகையை கடனாக வாங்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் குமாருக்கு தெரிந்த செல்வராஜ் என்பவரின் மூலமாக, தென்காசி மாவட்டம் நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர்மீரான் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாகூர்மீரான் தன்னிடம் ரூ.1 கோடி வரை கடன் பெற்றுத்தர முடியும் என்றும், அதற்கான நடைமுறைச் செலவுகளுக்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் குமாரிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பிய குமார் கடந்த 2023 ஏப்ரல் 5ம்தேதி ஜெயங்கொண்டத்தில் உள்ள வங்கி மூலமாக, தென்காசியைச் சேர்ந்த ஈசாக் மைதீன்அலி என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ.70 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து ஏப்.6ம் தேதியும் அதே வங்கி கணக்கிற்கு மேலும் ரூ.70 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் குமாரும், அவரது நண்பர் செல்வராஜும் நேரில் சென்று நாகூர்மீரான் வீட்டில் வைத்து ரூ.3 லட்சத்தை கையில் கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் ரூ.4.40 லட்சத்தை நாகூர்மீரானிடம் குமார் கொடுத்துள்ளார். ஆனால், அவர் ரூ.1 கோடி கடனை வாங்கித்தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் தான் கொடுத்த முன்பணத்தை திருப்பித்தருமாறு பலமுறை நேரில் சென்றும், தொலைபேசியிலும் கேட்டுள்ளார்.
பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்த நாகூர்மீரான், மீண்டும் பணத்தை கேட்டு தென்காசி பக்கம் வந்தால் ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார்,தென்காசி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்ஐ மாரிச்செல்வி தீவிர விசாரணை மேற்கொண்டார். இதின் அடிப்படையில், மோசடிப்பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரான செங்கோட்டை தாலுகா வல்லம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈசாக் மைதீன்அலி(43) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான முக்கிய நபரான நாகூர்மீரானை தேடி வருகின்றனர்.


