களக்காடு, அக்.17: நாங்குநேரி ரயில்வே கேட் பகுதியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்சுகந்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி நோக்கி வந்த டிப்பர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்த மர்ம நபர் இறங்கி தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாங்குநேரி அடுத்த பரப்பாடி அருகேயுள்ள பாண்டிச்சேரி நடுத்தெருவை சேர்ந்த பொன்ராஜ் பாண்டியன்(36) என்பதும், தப்பியோடியவர் வாகைக்குளத்தை சேர்ந்த அய்யப்பஜோதி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் சிங்கனேரி குளத்தில் இருந்து எந்தவித அரசு அனுமதியுமின்றி ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 3 யூனிட் சரள் மண்ணை திருடி, அய்யப்பஜோதியின் வீட்டின் அருகே கொட்டுவதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பொன்ராஜ் பாண்டியனை கைது செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ஐயப்பஜோதியை தேடி வருகின்றனர்.


