* குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் அவலம்
* மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு
களக்காடு,அக்.17: திருக்குறுங்குடியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி பகுதி பொதுமக்களுக்கு திருக்குறுங்குடி பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நம்பியாற்றில் உறை கிணறு அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வரும் தண்ணீரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதற்கும், சமையலுக்கும் மற்றும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு அடைந்துள்ளனர். குளிப்பதற்கும், மற்ற தேவைகளுக்கும் நீரின்றி கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய தேவையான தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் குடிநீருக்கு ஏங்கி வருகின்றனர். திருக்குறுங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள பிரதான குழாயில் பொருத்தப்பட்டுள்ள வால்வில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வால்வு பழுதை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் பெரும்படையார் கூறுகையில், ‘குடிநீருக்கு பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுக்க சென்றால் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் இல்லை. நாங்கள் எங்கு சென்று புகார் அளிப்பது? பொதுமக்களின் அத்தியாவசிய தேவை குடிநீர் ஆகும். ஆனால் குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டு 2 நாட்களாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது ஆகும். இதே நிலை நீடித்தால் பொதுமக்களை திரட்டி, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.


