நெல்லை, ஆக.17: கடையம் அருகே தனியார் தோட்டங்களுக்குள் புகுந்த 3 யானைகள் வாழை, மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, கரடி, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை மலையடிவார குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வபோது புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் தாக்கி வருகின்றன.இந்நிலையில் நேற்று அதிகாலை கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட பங்களா குடியிருப்பு கிராமத்தில் செல்வராஜ், குட்டப்பன், பத்மநாபன் ஆகியோருக்குச் சொந்தமான தோட்டங்களில் மூன்று யானைகள் புகுந்தது. அவை மாமரங்களை உடைத்தும், தென்னை மற்றும் வாழை குருத்துகளைச் சேதப்படுத்தியும் சென்றன.
இப்பகுதியில் காட்டு யானைகள், கரடிகளின் தொந்தரவு அடிக்கடி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாகவும் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். இதனிடையே கடையம் வனச்சரகப் பகுதியில் விடுபட்ட இடங்களில் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலார் மின்வேலி அமைக்காததால் வனவிலங்குகள் ஊருக்குள் எளிதாக விளைநிலங்களுக்கு புகுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே விடுபட்ட இடங்களில் உடனடியாக சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


