நெல்லை, ஆக.17: நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூல திருவிழா 4ம் நாளான நேற்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் ரதவீதிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூல திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 4ம் திருவிழாவன்று நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகள் ரதவீதி உலா நடந்தது.
தொடர்ந்து வரும் 20ம் தேதி அன்று இரவு 7 மணிக்கு கரூர் சித்தர், மானூருக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து ரதவீதிகள் சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாணசுவாமி கோயிலை சென்றடைகிறார். ஆவணி மூல 10ம் திருநாளான 22ம்தேதி அன்று இரவு 1 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி தேவி, அகத்தியர், குங்கலிய நாயனார் ஆகியோர் பல்லக்கு மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி 23ம்தேதி அதிகாலை மானூர் அம்பலவாணர் கோயிலை சென்றடைகின்றனர். அங்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கரூர் சித்தருக்கு சுவாமி காட்சி அளித்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


