வீரவநல்லூர், அக்.16: தமிழகத்தில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெற்றி பயணம் திட்டம் மூலம் தனியார் பஸ்கள், வாடகை கார், ஆட்டோ தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் அரசு போக்குவரத்து கழகமும் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் வரும் காலங்களில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம், சம்பள உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் என ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவியில் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வை வலியுறுத்தியும், வெற்றி பயணத்தால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பை அரசு சரிசெய்து தரவேண்டியும், ஆட்டோ தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெற்றி பயணம் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் தினசரி வருமானம் ரூ.600லிருந்து ரூ.200 ஆக குறைந்துள்ளது. இதனால் அன்றாட செலவுக்கே கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஆசிரியர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் என பலர் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறுவதால் அன்றாட கைக்கூலிகளாக திகழும் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். வெற்றி பயணம் திட்டத்தில் மாற்றங்கள் செய்து, வயது வரம்பு உள்ளிட்ட தகுதி நிபந்தனைகளை நிர்ணயித்து, தேவையுள்ள பயணிகளுக்கு மட்டும் சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


