தென்காசி, அக்.15:வன்னிக்கோனந்தல், தேவர்குளம் கிராமங்களில் இருந்து ஊத்துமலை, சுரண்டை பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தை தார் சாலையாக அமைத்து தர வலியுறுத்தி ஊத்துமலை அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் மூவிசுந்தர் தலைமையில் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தேவர்குளம், வன்னிக்கோனந்தல் கிராமங்களில் இருந்து ஊத்துமலை, சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலை உள்ளது.
இந்த சாலையை இந்த கிராம மக்கள் மட்டுமின்றி மேலஇலந்தகுளம், கூவாச்சிபட்டி, மூவிருந்தாளி, கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல கிராம விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லுதல், வணிகம், அன்றாட போக்குவரத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. தற்போது இந்த சாலையில் வனத்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்துவதாகவும், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
வனத்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும், இந்த சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைத்து தரவேண்டும். மேலும் வீரகேரளம்புதூர் தாலுகா சீவலபுரம் கரடிஉடைப்பு பஞ்சாயத்தில் முத்தம்மாள்புரத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், மருக்காலங்குளம், மேசியாபுரம், சீவலசமுத்திரம், தங்கம்மாள்புரம், கங்கணங்கிணறு, அண்ணாமலைபுதுார், மேலமருதப்பபுரம், ஊத்துமலை, ருக்மணியம்மாள்புரம், வடக்கு காவலாகுறிச்சி, கே.நவநீதகிருஷ்ணாபுரம், தட்டப்பாறை, வெண்ணிலிங்கபுரம், வெங்கடேஷ்வரபுரம், முத்தம்மாள்புரம், காடுவெட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்த்து வருகின்றனர்.
எனவே ஊத்துமலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு முத்தம்மாள்புரத்தில் உள்ள 57 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதில் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் மனோகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் மாநிலத் துணைத் தலைவர் வடகரை ஜாகிர்உசேன், தமிழர் விவசாயம் நீர்வள பாதுகாப்பு நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மகாலிங்கம், மற்றும் சண்முகசுந்தரம், செல்வம், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


