Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விபத்தில் 2 பேர் பலி சம்பவம் எதிரொலி: நெல்லையில் விதிகளை மீறி இயங்கும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை

நெல்லை, ஜூலை 15: நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் போலீஸ் துணை கமிஷனர் சரவணன் எச்சரிக்கை விடுத்தார். நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறி சென்றுவந்த நிலையில் கடந்த 13ம் தேதி கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த அப்துல் கபூர், அவரது மனைவி ஜீனத் பீவி ஆகியோர் மீது தனியார் பஸ் மோதி சம்பவ இடத்தில் பலியாகினர். இதைத்தொடர்ந்து விபத்து நடந்த வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆய்வு செய்தார். நெல்லை மாநகரத்தில் கலெக்சனுக்கான தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டு இயக்கப்படுதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே இருந்து வருகிறது.

இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் மாநகர துணை கமிஷனர் (கிழக்கு) சரவணன் தலைமையில் மாநகர பகுதியில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. ஆலோசனைக்கூட்டத்தில் மாநகர பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதிவேகமாக பஸ்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். டிரைவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பை முதன்மையாக கருத வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போக்குவரத்து வீதிகளை மீறி இயக்கப்படும் பஸ்கள், டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர துணை கமிஷனர் சரவணன் எச்சரித்தார். கூட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விபத்து நடந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியாக வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதி மாறி வருகிறது. இங்கு 4 திசைகளில் இருந்து வரும் மற்றும் செல்லும் வாகனங்கள் வெவ்வேறு திசை நோக்கி குறுக்கும் நெடுக்குமாக அதிக அளவில் கடந்து செல்வதால் இப்பகுதியில் வாகனங்களை கடப்பவர்களும் நடந்து செல்வர்களும் அச்ச உணர்வுடன் பயணிக்கின்றனர். பெரும்பாலான வாகனங்கள் இப்பகுதியில் வேகத்தை குறைக்காமல் திருப்பங்களில் திரும்புவதால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசியபடி வேகமாக கடக்கும் நிலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் இந்தப்பகுதியில் சென்ற தம்பதி மீது அரசு பஸ் ஏறி இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இங்கு போக்குவரத்து சீர் செய்ய மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறை சார்பில் தனியார் பஸ்கள், வாகன ஓட்டிகள் இப்பகுதியை மெதுவாகவும் பொறுப்பாகவும் கடந்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்து நடந்த பகுதி மற்றும் இங்குள்ள சாலைகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால் வேகத்தடை அமைக்க வேண்டும், பாதாள சாக்கடை போன்ற பணிகளுக்காக குழிகள் தோண்டினால் அவை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும். அதிக வணிக நிறுவனங்கள் இங்கு இருப்பதால் மக்கள் அதிக அளவில் இப்பகுதியில் கூடுகின்றனர். எனவே பாதசாரிகள் இப்பகுதியை கடப்பதற்கு சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.