Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரி புளியரையில் பொதுமக்கள் சாலை மறியல்: 35 பேர் கைது

செங்கோட்டை, ஜூன் 15: புளியரை வழியாக கேரளாவுக்குக் கனிம வளங்கள் அதிகளவில் கொண்டு செல்வதை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்திலிருந்து தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சமீபகாலமாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புளியரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் புளியரையில் நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கனிம வளம் கடத்தலால் எங்கள் பகுதியின் இயற்கை வளம் அழிவதோடு, சாலைகளில் நிம்மதியாக நடக்கக்கூட முடிவதில்லை. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 35 நபர்களை போலீசார் கைது செய்தனர்.