சங்கரன்கோவில்,அக்.14: சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கடந்த சில நாட்களாக தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்.3ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதன்பிறகும் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் வேலைக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்வோர் மற்றும் சிறு வியாபாரிகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வருவதால் வீடுகளில் உள்ள மின்சாரத்தால் இயங்கும் சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவில் மின்சார வாரியம் சார்பில் மாதத்தில் ஒரு நாள் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை நடைமுறைப்படுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக முறையாக நடந்த இப்பணியில் தற்போது தொய்வடைந்துள்ளது.
இப்போது சங்கரன்கோவிலில் மாதம் ஒருமுறை மின்சார வாரியம் சார்பில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையிலும் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக மின்வாரியம், அடிக்கடி பராமரிப்பு பணி எனக்கூறி மின்வெட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் மின்சார பராமரிப்பு பணிகளை முறையாக செய்து மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


