குடிநீர் விநியோகத்திற்கான குழாயை சிறிய அளவிலேயே அமைப்பதா?.. கிளாங்காடு பஞ். அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை முயற்சி: அதிகாரிகள் சமரசம்
கடையநல்லூர், அக்.14: கிளாங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட செம்பூரில் குடிநீர் விநியோகத்திற்கான குழாயை சிறிய அளவிலேயே அமைப்பதால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்துவந்த வந்த செங்கோட்டை பிடிஒ ஜெயலட்சுமி, இலத்தூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர். தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சிக்குட்பட்ட செம்பூர் கிராமம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செம்பூர் கிராமத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீர் குழாயானது சாலையில் இருந்து ஆழப் பகுதியில் இல்லாமல் மேலோட்டமாகவே உள்ளது.
இதனால் சிறிய வாகனங்கள் சென்றாலே அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், செம்பூர் கிராம மக்களுக்கு முறையாகக் குடிநீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிளாங்காட்டில் இருந்து செம்பூர் கிராமத்திற்கு புதிதாகக் குடிநீர் விநியோகக் குழாய் பதிக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புதிதாகப் பதிக்கப்படும் குடிநீர் குழாயும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த முறையைப் போலவே குடிநீர் குழாய் சாலையின் மேலோட்டமாகவே 2 இன்ஞ் அளவில் சிறியதாக இருப்பதாகக் கூறிய கிராம மக்கள், இதன் மூலம் முறையான குடிநீர் விநியோகம் கிடைக்காது என எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவிலான குடிநீர் பகிர்மானக் குழாய் பதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன்பே இப்பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, நேற்று முன்தினம் நள்ளிரவு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த செம்பூர் கிராம மக்கள், நேற்று காலை கிளாங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் பொருட்டு செம்பூரில் உள்ள மைதானத்தில் திரண்டு வந்தனர். தகவலறிந்து விரைந்துவந்த செங்கோட்டை யூனியன் கிராம ஊராட்சிகளுக்கான பிடிஒ ஜெயலட்சுமி, இலத்தூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஆய்க்குடி சிறப்பு எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ராட்சத அளவிலான குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டதோடு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.


