புளியங்குடி, அக்.10: புளியங்குடி மார்க்கெட் பகுதியில் பழமையான கல் பாலம் சேதமடைந்து காணப்படுவதால், உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்குடி-டிஎன் புதுக்குடி மார்க்கெட் பகுதியில் இருந்து டிஎன்புதுக்குடி கிழக்கு பகுதிக்கு செல்லும் வழியில் பழமையான கல் பாலம் உள்ளது. இதில் சுமார் ஒரு அடி அளவில் ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் தொடர் நீரோட்டம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு ஏற்படுகிறது ஓட்டை விழுந்த பாலத்தை நகராட்சி சார்பில் தற்காலிமாக கல்லை போட்டு மூடி வைத்துள்ளனர் இருப்பினும் அவ்வவழியாக செல்லும் பொதுமக்கள் அAச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக இந்த கல் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பரமகுரு கூறுகையில், ‘இது மார்க்கெட் பகுதி என்பதால் தினமும் ஏராளமானோர் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலத்தில் ஓட்டை மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களும் போதுமான உயரம் இல்லாததால் குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் பாலத்தின் சேதமடைந்த பகுதி தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பருவமழை தொடங்கினால் பாலம் மேலும் வலுவிழக்கும் அபாயம் உள்ளது.
பாலத்தின் இருபுறமும் காய்கறி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் புதர் போல் வளர்ந்துள்ள செடிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் இருந்து கொட்டப்படும் காய்கறி கழிவுகள் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள், ஈக்கள் உள்ளிட்டவை பெருகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பாலத்தின் இருபுறமும் புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளதால் அப்பகுதியில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தின் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேலும் இருபுறமும் குவிந்துள்ள காய்கறி மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றி, புதர் செடிகளை தூர்வாரி முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க இருபுறமும் தடுப்பு வேலிகளை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி குப்பைகளை, கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்’ என்றார்.


