விகேபுரம், அக்.9:உலக வன உயிரின வார விழாவை முன்னிட்டு விகேபுரம் அருகேயுள்ள செட்டிமேட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பை சூழல் சரக உதவி வன உயிரினக்காப்பாளர் அன்னக்கொடி முன்னிலை வகித்தார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் ஹேமலதா தலைமை வகித்து 3 வனக்குழுவிற்குட்பட்ட 12 பயனாளிகளுக்கு ரூ.4.55 லட்சம் கடனுதவி வழங்கினார். மேலும் ‘வன விலங்குகளுடன் இணைந்து வாழ்வோம்’ என்ற தலைப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம், மனித-வனவிலங்கு மோதலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வனவிலங்குகளுடன் இணக்கமாக வாழ்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புனித சவேரியர் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. செட்டிமேடு மற்றும் வேம்பையாபுரம் வனக்குழு கிராமங்களில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் இசைவாணி உள்ளிட்ட மருத்துவ குழுவினரால் செட்டிமேடு கிராம வனக்குழு உறுப்பினர்கள், கிராம மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 100 பேர் பங்கேற்று பயனடைந்தனர். அவர்களுக்கு இலவசமாக கண்ணாடி, மருந்துகள் வழங்கப்பட்டது. 3 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அம்பை சூழல் வனவர் நாகராஜ் மற்றும் வனக்காப்பாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


