கோவில்பட்டி, அக். 8: கோவில்பட்டியில் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் உயிரிழந்தார். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர், கோவில்பட்டி நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு புதுரோட்டில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை எதிரே சென்றபோது, உப்பத்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற டிப்பர் லாரி, மூர்த்தி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூர்த்தி, டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த கீழக்கரந்தையைச் சேர்ந்த கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


