கோவில்பட்டி, அக். 8: கோவில்பட்டியில் 23 கிலோ புகையிலைப் பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் பால்பாண்டி (45). இவர், செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே காரில் புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது காரில் சுமார் 23 கிலோ எடையிலான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பால்பாண்டியையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


