Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் வெள்ளை, பச்சை சாத்தி சுவாமி சண்முகர் வீதியுலா

திருச்செந்தூர், செப். 8: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் நேற்று காலை சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளித்தார். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற ஆவணித் திருவிழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. 7ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் முன் பக்கம் சிவன் அம்சமாகவும், பின்பக்கம் நடராஜர் அம்சமாகவும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. நேற்று 8ம் திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு பந்தல் மண்டபம், தையல்நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து காலை 7.30 மணிக்கு மேலக்கோயில் சேர்ந்தார்.

தொடர்ந்து பந்தல் மண்டபம், வைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, மதியம் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து இன்று காலை சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்தப் பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி நெல்லை சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் பகலில் தனித்தனிப் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், பத்தாம் திருவிழாவாக நாளை காலை 7 மணிக்கு துவங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 11ம் திருவிழாவை முன்னிட்டு செப்.10ம் தேதி சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கின்றனர்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கிறார். 12ம் திருவிழாவை முன்னிட்டு மாலை சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதியுலா வந்து, வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டபத்திற்கு சேர்கிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்மன் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது.