கடையநல்லூர், செப். 7: மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயில் வடக்கு தெருவில் அமைந்துள்ள நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 3ம்தேதி சுவாமிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, அதைத் தொடர்ந்து கீழகிராமம் கே.வி.கோபால கிருஷ்ண பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. 4ம்தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை கும்ப ஜபம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் குழந்தைகள் ராதா, கிருஷ்ணன் வேடம் அணிந்து வீதியுலா நடந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு ராதா,கிருஷ்ணன் வேடம் அணிந்து வந்தனர். 5ம்தேதி காலையில் உஞ்சவிருத்தி, தொடர்ந்து ராதா கல்யாணம் சிறப்பாக நடந்தது.
இரவில் ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை நவகாருண்ய சேவா சமிதி டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். களக்காடு: களக்காடு அருகே உள்ள மேல கருவேலங்குளம் அழகிய மணவாள பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோலாட்டம் ஆடினர். இதைத்தொடர்ந்து இரவில் உறியடி வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முன்னதாக அழகிய மணவாள பெருமாளுக்கும் கிருஷ்ணர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏர்வாடி: ஏர்வாடி வீரராகவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு பெருமாள்-தாயாருக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ரதவீதியை சுற்றி வந்தனர். இரவு 7 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


